தோட்டப் பகுதிகளில் இயங்கும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைத்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகள் பெரும்பாலும் நகரங்களிலிருந்து தொலைவான மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைந்த பிரதேசங்களில் அமைந்துள்ளன.
இதனால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்தப் பாடசாலைகளில் நிரந்தரமாக கடமையாற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, முறையான தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தால் இரண்டாம் நிலை வகுப்புகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதன் விளைவாக, தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் பெறும் தேர்ச்சி விகிதம், ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக காணப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், தோட்டப்புற இளைஞர்கள் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சவால்களை கருத்தில் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளமும் பௌதீக வளங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம், அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த யோசனையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
