இலங்கையில் மண்சரிவு சம்பவங்களால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சல்மிக்க சிலரின் முயற்சியால் மீட்பு நடவடிக்கையில் உயிரோடு எடுக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியில் தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு வெளியே கொண்டுவரப்பட்டார்கள்.
கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதி வரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது.
நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன்.
கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர்.
அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார்.
