மலையகத் தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த இடத்திலேயே வாழ நிலம் கேட்டுப் பெறுவது நியாயமான உரிமை என்றும், அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து கலந்துரையாடப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களைக் குழுவொன்றை சந்தித்துப் பேசியபோது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மலையகத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்றும், அவர்களுக்கு விவசாயம் செய்யவும், பாதுகாப்பாக வாழவும் சொந்த நிலங்கள் தேவை என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணி வழங்குவது குறித்துத் தான் ஜனாதிபதியிடம் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மலையகத்தில் காணி கிடைக்காதபட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது ஒரு சாத்தியமான மாற்றுத் திட்டமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த நிலங்களை மலையக மக்களுக்குப் பெற்றுத் தரத் தாம் தயாராக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Video Credit Sooriyamfm
