அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் இரு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், ஒரு விமானி உயிரிழந்ததுடன், மற்றொரு விமானி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து அட்லாண்டிக் கவுன்டியில் அமைந்துள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெடரல் விமான நிர்வாகத்தின் (FAA) தகவலின்படி, என்ஸ்ட்ரோம் F-28A மற்றும் என்ஸ்ட்ரோம் 280C வகையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்து நேரத்தில், அந்த உலங்கு வானூர்திகளில் விமானிகளைத் தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, உலங்கு வானூர்திகளின் பறக்கும் வழித்தடங்கள், விமானிகளுக்கிடையிலான தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.