இலங்கையில் தாக்கிய டிட்வா சூறாவளிக்குப் பிறகு நடந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய இராணுவம் தீவிரமாகப் பணியாற்றியது. இந்திய இராணுவப் பொறியாளர்கள், இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இணைந்து, கடுமையான வானிலைச் சூழ்நிலைகளில் மேற்கொண்ட சவாலான பணிகளை இலங்கை இராணுவம் பாராட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் சேதமடைந்த கிளிநொச்சி பாலத்தை விரைவாகச் சீரமைப்பதற்காக, இந்திய இராணுவத்தின் பொறியாளர் பணிக்குழு, இலங்கை இராணுவப் பொறியியலாளர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டது.
முக்கியப் பொறியியல் ஆதரவை வழங்குவதற்காக, 48 பணியாளர்களைக் கொண்ட இந்திய இராணுவத்தின் பொறியாளர் குழு விமானம் மூலம் இலங்கை வந்தது. சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களைச் சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல் உட்பட, முக்கியமான தகவல்தொடர்பு வழிகளை மீண்டும் நிலைநாட்டுவதில் இந்தியப் பணிக்குழு கவனம் செலுத்தியது.
இந்தப் பொறியியல் குழுவில், பாலங்கள் தொடர்பான நிபுணர்கள், நில அளவை நிபுணர்கள் மற்றும் கனரக உபகரணங்கள், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகளை இயக்குவதில் திறமை பெற்ற பணியாளர்களும் அடங்கியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட இணைப்புகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் C-17 விமானங்கள் மூலம் விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடிய நான்கு பாலங்களின் உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 'ஆபரேஷன் சாகர் பந்துவின்' கீழ் இந்திய இராணுவம் விரிவான மருத்துவ உதவிகளையும் வழங்கியது. இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவி அளிக்கப்பட்டது.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோனைச் சந்தித்து, அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகளின் ஒரு பகுதியை வழங்கினார். இந்தச் சந்திப்பில், பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளிக்குப் பிறகு, தனது அண்டை நாடுகளைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கும், நாட்டின் மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கும் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், “ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோனைச் சந்தித்தார். அழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையின் ஆரம்ப மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின்படி, பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவே 'ஆபரேஷன் சாகர் பந்து' தொடங்கப்பட்டது.
