அனர்த்த நிவாரண நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு, தற்போது தேசிய அரசியல் மட்டத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரால் அதற்கான தெளிவுபடுத்தலும் வழங்கப்பட்டது.
இருப்பினும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் முன்வைக்கப்பட்ட நிவாரண கொடுப்பனவுக்கான விண்ணப்பத்தில் தரவுகளில் உள்ள முரண்பாடு குறித்துத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் கடந்த 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் விண்ணப்பத்தின்படி, நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 1,216 குடும்பங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நெடுந்தீவில் 893 வீடுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
எனவே, மாவட்டச் செயலகத்தால் நெடுந்தீவில் 1,216 வீடுகளுக்கு எவ்வாறு நிவாரணம் கோர முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம், அரசாங்க அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக உதய கம்மன்பில ஆரோபித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துச் சூரியன் செய்திப் பிரிவு இன்றும் ஆராய்ந்தது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரனைத் தொடர்புகொண்டு வினவியபோது, அவர் விளக்கமளித்தார்.
அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் முதலாவதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கோரப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மட்டுமே, மாவட்டச் செயலகத்துக்குத் தரவுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதற்கமைய, நெடுந்தீவில் 901 வீடுகள் சேதமடைந்ததாகவும், 1,216 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவுமே தாம் மாவட்டச் செயலகத்துக்குத் தகவல் வழங்கியதாகப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
எனினும், மாவட்டச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 901 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகள் எனப் பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாவது சுற்றறிக்கையில் காணப்பட்ட தெளிவற்ற நிலையே இதற்குக் காரணம் எனவும் நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் கூறினார். அத்துடன், அனர்த்த காலப்பகுதியில் தீவுக்கும் நகருக்குமான தொடர்புகளைப் பேணுவதில் பெரும் சிரமம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
