இலங்கையின் பிரபலமான ஒரு பாடசாலையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே தலையிட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்த நிறுவனமும் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தன்னிச்சையாக அல்லது கட்டுப்பாடின்றி பயன்படுத்த முடியாது என அவர் வலியுறுத்தினார். பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் சட்டபூர்வமான நடைமுறைகளைக் கடைப்பிடித்தே செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில், உள்நாட்டு சட்டங்களையும் சர்வதேச ஒப்பந்தங்களையும் அரச நிறுவனங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது உடல் அல்லது மன பாதிப்புகளுக்கு மட்டுமன்றி, அவர்களின் கருத்துகளை கேட்காமல் புறக்கணிப்பதும், பங்கேற்கும் வாய்ப்புகளை மறுப்பதும் அதில் அடங்கும் என அவர் விளக்கினார்.
முன்னதாக, மாணவர் தலைவர்கள் நியமனம் மற்றும் பதக்கங்கள் வழங்கும் முறைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் மேற்கொண்டு, அதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அவர் நினைவூட்டினார்.
இச்சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா அல்லது இதன் மூலம் எந்த மாணவருக்கும் அநீதி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஆணைக்குழு ஆராய்ச்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விடயம் மாணவர்களையும் பாடசாலையின் மொத்த சூழலையும் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஆய்வு செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.