பண்டிகை காலத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், விலை பட்டியலை வெளிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், பொதிகளில் உள்ள லேபிள்கள் மற்றும் தகவல்களில் மாற்றங்கள் செய்தல், போலி தயாரிப்புகள் மற்றும் எஸ்.எல்.எஸ் (SLS) தரச்சான்று இல்லாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மின்சார மற்றும் இலத்திரனியல் சாதனங்களை உத்தரவாத அட்டைகள் (Warranty Card) வழங்காமல் விற்பனை செய்தமை தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் எரிவாயு (Gas) தொடர்பில் போலியான தட்டுப்பாடு உருவாக்குதல் மற்றும் பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறக்கூடும் என்பதால், இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் 021-2219001 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபைக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும், விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு எதிராக எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், பொதுமக்களும் தங்கள் பயன்பாட்டிற்காக பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
