இலங்கை விமானப்படைக்கு 10 உலங்கு வானூர்திகள் இலவசமாக: அமெரிக்காவின் நன்கொடை அறிவிப்பு

 


இலங்கை விமானப்படையின் செயல்திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா 10 TH-57 (Bell 206 Sea Ranger) ரக உலங்கு வானூர்திகளை இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அறிவித்துள்ளார்.

இந்த உலங்கு வானூர்திகள், அமெரிக்காவின் “மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டம்” (Excess Defense Articles – EDA) கீழ் இலங்கைக்கு மாற்றப்படுகின்றன. இதற்காக அமெரிக்கா எந்தவித கட்டணத்தையும் வசூலிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் கொண்ட இந்த உலங்கு வானூர்திகள், 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது தேடல், மீட்புப் பணிகளில் உலங்கு வானூர்திகள் வகிக்கும் முக்கியத்துவத்தை தூதுவர் ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த 10 உலங்கு வானூர்திகள் விமானப்படையின் செயற்பாட்டு திறனை அதிகரிப்பதுடன், விமானிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளையும் மேம்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க இலங்கை விமானப்படைக்கு சிறந்த வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நன்கொடையை அறிவிக்கும் வகையில், தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில், இலங்கை விமானப்படைக்கு இந்த 10 உலங்கு வானூர்திகளை வழங்குவதில் அமெரிக்கா பெருமகிழ்ச்சி அடைகிறது என பதிவிட்டுள்ளார்.

புதியது பழையவை