இந்தியாவின் சுதந்திரம் என்பது மிகப் பெரும் தியாகங்களின் விளைவு என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியா – இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.0” என்ற தலைப்பில், புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ஆரம்பமான மூன்று நாள் நிகழ்வின் தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வலிமையான மற்றும் சுயாதீனமான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்புவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் உரையாற்றிய அவர் இன்றைய இந்தியா இயல்பாகவே சுதந்திரம் பெற்றது அல்ல. இந்த சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் அளவற்ற தியாகங்களைச் செய்துள்ளனர். அவமானங்களைத் தாங்கினர், கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டனர், பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வு, இளம் தலைமுறையினரின் தலைமைத் திறனை வளர்த்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் அவர்களின் பங்கினை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.