இந்தியாவின் பிரிமியர் லீக் டி–20 கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. இந்த முடிவு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறும் பிரிமியர் லீக் தொடரின் 19-வது சீசன் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், முஸ்தபிஜுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
எனினும், இந்தியா–வங்கதேச அரசியல் சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கொல்கத்தா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் அறிவுறுத்தலின் பேரில் முஸ்தபிஜுர் ரஹ்மான் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது பிரிமியர் லீக் வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்த சம்பவமாகும்.
இந்த முடிவு, வங்கதேச மக்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், எந்த சூழ்நிலையிலும் வங்கதேசமும் அதன் கிரிக்கெட் வீரர்களும் அவமானப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. அடிமைத்தனத்தின் காலம் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, மார்ச் 26 முதல் நடைபெறவுள்ள பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதற்கு வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை, பிரிமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் வங்கதேசத்தில் ஒளிபரப்பப்படக் கூடாது. என, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பரோஸ் கான் தெரிவித்துள்ளார்.