பொய் உரிமை கூறி வீடு வாடகைக்கு விட்ட பெண்ணுக்கு சிறை – கொழும்பு நீதிமன்றத்தின் கடும் தீர்ப்பு

 


மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தன் சொத்தாகக் கூறி, அதனை மூன்றாம் நபருக்குக் குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அந்த ஒரு வருட சிறைத்தண்டனையில், ஏழு மாதங்களை உடனடியாக சாதாரண சிறைத் தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள ஐந்து மாதங்களை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில், குறித்த பெண் தமக்குச் சொந்தமில்லாத வீடொன்றைத் தன் சொத்தென பொய்யாகக் கூறி, முறைப்பாட்டாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கியிருந்தார். பின்னர், அந்த வீடு வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்பது வெளிப்பட்டது.

இந்த விடயம் தெரிய வந்ததும், வீட்டின் உண்மையான உரிமையாளர், அங்கு குடியிருந்தவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு, தானே அந்த வீட்டின் சட்டபூர்வ உரிமையாளர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

விசாரணைகளின் போது, அந்த வீட்டுக்கான வாடகை தொகை முழுவதையும் குறித்த பெண்ணே பெற்றுக்கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் 2018ஆம் ஆண்டிலேயே கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் முடிவில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும், பிரதான சந்தேக நபரான குறித்த பெண்ணுக்கு எதிரான சாட்சிகள் போதுமானவை என நீதிமன்றம் தீர்மானித்து, அவரை குற்றவாளியாக அறிவித்தது.

உரிமையாளர் அல்லாத ஒருவர் சட்டவிரோதமான முறையில் சொத்தை குத்தகைக்கு வழங்கியது பாரிய நிதி மோசடி என நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேவேளை, முறைப்பாட்டாளரும் வீட்டின் உண்மையான உரிமையாளரும் குறித்த பெண்ணிடமிருந்து எவ்வித நட்டஈட்டையும் கோரவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பெண் இதற்கு முன்னரும் பல நிதி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன், நீண்ட காலமாக பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளமை விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

புதியது பழையவை