6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயம் குறித்து, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சர்ச்சையை ஏற்படுத்திய பாட அலகை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் (NIE) தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர், இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், இந்த பாடப்புத்தக விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான தீர்மானத்தை தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை எடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.