யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்றை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வழிமறித்து, சாரதியை கடுமையாக தாக்கிய சம்பவம் நேற்று (07) மாலை பதிவாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சாரதி, ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து, தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை (09) தீவகப் பகுதிகளில் பேருந்து சேவையை நிறுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை 780 வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று இன்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பேருந்தை வழிமறித்து உள்ளே ஏறியுள்ளார். பின்னர், “உனக்கு வாகனம் ஓட்டத் தெரியாதா?” என வாக்குவாதம் செய்து, சாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
சாரதி தாக்கப்படுவதை அவதானித்த பயணிகள் உடனடியாக தலையிட்டு, தாக்குதலாளியை பேருந்தில் இருந்து கீழே இறக்கி உள்ளனர்.
இதையடுத்து, காயமடைந்த சாரதி பயணிகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், தாக்குதல் நடத்திய நபரின் விவரங்களையும் பொதுமக்களின் தகவல்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர், கடமையின் போது கடுமையாக தாக்குதலுக்குள்ளான சாரதி, ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்த வழித்தடத்தின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்றவாளிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாளை 09ஆம் திகதி தீவகப் பகுதிகளில் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் பேருந்து சேவை முடக்கம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.