ஊழியர் ஓய்வூதியத் திட்டம் குறித்து பரவும் தகவல்கள் தவறானவை: EPF நடைமுறையில் மாற்றமில்லை – தொழில் அமைச்சு

 


ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என தொழில் அமைச்சு உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளது.

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (06) நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஓஷானி உமங்கா ஹப்புஆரச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த விளக்கத்தை வழங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அவரது கருத்துக்கள் சில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

EPF மற்றும் ETF ஆகிய இரண்டு நிதியங்களும் தனித்துவமான நோக்கங்களைக் கொண்டவை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். EPF முதன்மையாக ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படுகிறது என்றும், சில உறுப்பினர்கள் பல்வேறு கட்டங்களில் தங்களது சலுகைகளைப் பெற்றுக்கொள்வதால், அதன் நீண்டகால சமூகப் பாதுகாப்பு நோக்கம் முழுமையாக உணரப்படாமல் போகும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற பின்னர் ஊழியர்களுக்கு அரசு ஓய்வூதியத் திட்டத்தைப் போன்ற ஒரு புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மட்டும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுமாயின், அவை தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே மேற்கொள்ளப்படும். இந்தக் குழுவில் அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குவார்கள் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள EPF நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், EPF உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பிறகு வழக்கம் போலத் தங்களது உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள கொடுப்பனவு வழங்கும் செயல்முறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என தொழில் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

புதியது பழையவை