கிறீன்லாந்து தீவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டென்மார்க் அரசாங்கத்தைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிறீன்லாந்தை விலைக்கு வாங்குவது அல்லது அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெறுவது குறித்து நீண்ட காலமாக ஆர்வம் காட்டி வரும் ட்ரம்ப், சமீபத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
கிறீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவ நடவடிக்கையும் ஒரு தெரிவாக இருக்கலாம்” என ட்ரம்ப் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த கருத்து, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், டென்மார்க் மற்றும் கிறீன்லாந்து மக்களிடையே கவலை மற்றும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலைமையால் உருவாகியுள்ள இராஜதந்திரப் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்கான கோரிக்கையை டென்மார்க் மற்றும் கிறீன்லாந்து அரசாங்கங்கள் இணைந்து முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிறீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட், தனது சமூக வலைதளப் பதிவில், “கிறீன்லாந்து தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள கடுமையான அறிக்கைகள் குறித்து நேரடியாக விவாதிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ட்டிக் பகுதியில் அமைந்துள்ள முக்கிய புவியியல் இருப்பிடமும், பெரும் கனிம வளங்களும் காரணமாக அமெரிக்கா கிறீன்லாந்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
எனினும், கிறீன்லாந்து எந்த நிலையிலும் விற்பனைக்கு அல்ல என்பதில் டென்மார்க் அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
