அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், கொலம்பியா நகரில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்து தலைமறைவாக இருந்த அவரது முன்னாள் காதலர் அர்ஜுன் சர்மா, தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதைச் சேர்ந்த நிகிதா கோடிஷாலா (27), மேரிலாந்தின் கொலம்பியா பகுதியில் வசித்து வந்ததுடன், அங்குள்ள ஒரு ஹெல்த் கேர் நிறுவனத்தில் ‘டேட்டா அனலிஸ்ட்’ ஆக பணியாற்றி வந்துள்ளார்.
நிகிதாவும், மேரிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சர்மா (27) என்பவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நிகிதாவை கடைசியாக பார்த்ததாகக் கூறிய அர்ஜுன், அவர் காணவில்லை என ஹோவர்டு கவுண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நிகிதா வசித்து வந்த இடம் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அர்ஜுனின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், கடந்த 3 ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிகிதாவின் சடலம் வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்தை மறைப்பதற்காகவே, நிகிதா காணவில்லை என போலீசாரிடம் பொய்ப் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அர்ஜுன் சர்மாவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
அமெரிக்க உளவு அமைப்புகள் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் தலைமறைவாக இருந்த அர்ஜுன் சர்மா கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புக்குப் பிறகு நேற்று கைது செய்யப்பட்டார்.
