நல்லூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜ்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும், நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் மயூரனின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், துணைத் தலைவர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 2026 ஜனவரி 01 முதல் பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நெகிழித் தாள் (Lunch Sheet) முற்றாகத் தடை செய்யப்படுகின்றது. அதன் அடிப்படையில் 2026 ஜனவரி 01 முதல் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உணவு பரிமாறும் போது நெகிழித் தாளைப் பயன்படுத்த முடியாது.
திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தத் தேவையான ஏற்பாடுகளை மண்டப உரிமையாளர்கள் செய்து கொடுக்க வேண்டும்; அத்துடன் அதனைக் கண்காணிக்கவும் வேண்டும்.
உணவுகளைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவு விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கட்டணக் கழிவகற்றல் முறைமையின் கீழ் தங்களை உடனே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கான வியாபார உரிமங்கள் (அனுமதிகள்) ரத்து செய்யப்படும்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆளுகைப் பகுதியில் இன்னும் பதிவு செய்யப்படாத உணவு விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களை நடத்துபவர்கள் எதிர்வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
லாட்ஜ்களை நடத்தும் உரிமையாளர்கள் தங்களுடைய லாட்ஜ்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் மற்றவர்களுக்குக் கழிவகற்றல் தொடர்பில் அறிவிப்புகள் வழங்க வேண்டியதுடன், அவர்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்கு ஏதுவாக தங்களுடைய லாட்ஜ்களில் கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்.
இவ்விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதனைச் சுகாதார ஆய்வாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர்.
இவ் அறிவித்தல்களை மீறிச் செயல்படும் உணவு விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களின் அனுமதிகள் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.