யாழ். போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு நீதிமன்ற உத்தரவு

 


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களைச் சேதப்படுத்திய நபருக்கு, மருத்துவமனைக்கு 55,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மருத்துவமனைக்குள் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர், அங்கு கடமையில் இருந்த அலுவலர்களுடன் தர்க்கம் புரிந்து, மேசையிலிருந்த அச்சு இயந்திரம் (Printer) ஒன்றினை உடைத்துச் சேதமாக்கி இருந்தார்.

இது தொடர்பான கண்காணிப்பு கேமராக்களின் காணொளிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, புகாரின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அளித்த உத்தரவு

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட வழக்கில் அவரை குற்றவாளி எனக் கண்ட நீதிமன்றம், மருத்துவமனை உபகரணங்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதற்காக மருத்துவமனைக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு (நஷ்ட ஈடு) வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

புதியது பழையவை