ஐ.பி.எல். ஏலம்: மதீஷ பத்திரனவை ₹18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது KKR

 


அபுதாபியில் தற்பொழுது (டிசம்பர் 16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 18 கோடி இந்திய ரூபாய்க்கு (சுமார் 61 கோடி இலங்கை ரூபாய்) வாங்கியுள்ளது.

இதன் மூலம், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட இலங்கை வீரர் என்ற சாதனையை மதீஷ பத்திரன நிறுவியுள்ளார்.

மதீஷ பத்திரனாவின் ஏலம் 2 கோடி இந்திய ரூபாய் என்ற ஆரம்ப விலையில் தொடங்கியது. அவரைப் பெறுவதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ஏலத் தொகை 16 கோடியைத் தாண்டிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலப் போட்டியில் நுழைந்து, இறுதியில் 18 கோடி ரூபாய்க்கு அவரைத் தன்வசமாக்கியது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடிய பத்திரன, தனது சிறந்த யார்க்கர் பந்துவீச்சால் பெரிதும் அறியப்பட்டவர். இம்முறை கொல்கத்தா அணியின் பந்துவீச்சுப் பிரிவுக்கு அவர் கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஏலச் சுற்றின்போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25.20 கோடி ரூபாய்க்கு KKR அணி வாங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை