1,000 கோல்கள் வரை பயணம் தொடரும் – ரொனால்டோ உறுதி

 


தனது கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

40 வயதான ரொனால்டோ, கடந்த சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை கோல் பெற்று, அல் நாசர் அணியின் 3–0 வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த இரண்டு கோல்களுடன், தேசிய அணி மற்றும் கழகங்களுக்காக அவர் அடித்த மொத்த கோல்கள் எண்ணிக்கை 956 ஆக உயர்ந்துள்ளது.

சவூதி அரேபிய கழகமான அல் நாசரில் 2022 ஆம் ஆண்டு இணைந்த ரொனால்டோ, கடந்த ஜூலை மாதம் தனது ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளார். இதன் மூலம், அவர் 42 வயது வரை அக்கழகத்துக்காக விளையாடவுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற உலக கால்பந்து விருது விழாவில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரொனால்டோ, தனது எதிர்காலம் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தொடர்ந்து விளையாடுவது சவாலானது தான். இருப்பினும் அதற்கான ஊக்கம் இன்னும் உள்ளது. ஆர்வமும் ஆராதனையும் குறையவில்லை. தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற விருப்பம் வலுவாக உள்ளது.

எனது இலக்கு அனைவருக்கும் தெரியும். நான் கிண்ணங்களையும் சாதனைகளையும், குறிப்பாக 1,000 கோல்கள் என்ற இலக்கையும் எட்ட விரும்புகிறேன். பெரிய காயங்கள் ஏற்படாவிட்டால், அந்த இலக்கை நான் நிச்சயமாக அடைவேன்” என தெரிவித்தார்.

ரொனால்டோ, போர்த்துக்கல் தேசிய அணிக்காக 143 கோல்கள் மற்றும் ரியல் மெட்ரிட் அணிக்காக 450 கோல்கள் பெற்றுள்ளதுடன், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மெட்ரிட், ஜூவென்டஸ் மற்றும் அல் நாசர் ஆகிய நான்கு கழகங்களுக்காகவும் தலா 100க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்த ஒரே வீரராக சாதனை படைத்துள்ளார்.

புதியது பழையவை