இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டங்களுக்கு சர்வதேச எதிர்ப்பு – 14 நாடுகள் கண்டனம்

 


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைப்பதற்காக இஸ்ரேல் அண்மையில் வழங்கிய அனுமதிக்கு, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், “எந்தவொரு இணைப்பு நடவடிக்கையையும், குடியேற்றங்களை விரிவுபடுத்தும் கொள்கைகளையும் நாங்கள் தெளிவாக எதிர்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்றங்கள் குறித்த அறிவிப்பை, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு உருவாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என்றும், காசாவில் தற்போது நிலவும் பலவீனமான போர் நிறுத்த நிலையை பாதிக்கக்கூடும் என்றும் அந்த 14 நாடுகளின் கூட்டு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முடிவையும் குடியேற்ற விரிவாக்க நடவடிக்கைகளையும் உடனடியாக மீளப் பெறுமாறு சம்பந்தப்பட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.

1967 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அதே ஆண்டு கிழக்கு ஜெரூசலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தற்போது மேற்குக் கரையில் சுமார் 3 மில்லியன் பலஸ்தீனர்களுடன், 5 லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய குடியேறிகள் வாழ்ந்து வருகின்றனர்.

2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்ததிலிருந்து, மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு இஸ்ரேலிய படைகள் அடிக்கடி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

வடக்கு காசாவின் ஜபலியா பகுதியில், இஸ்ரேலிய படைகள் நிலை கொண்டுள்ள இடத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நேற்று (25) மேலும் ஒரு பலஸ்தீனர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 400க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை