அதி அபாய நிலச்சரிவு வலயங்களில் 5,000க்கும் அதிகமான வீடுகள் – NBRO

 


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் அதிக அபாய நிலச்சரிவு வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றி, புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் வாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும், ஆய்வுகளின் முடிவுகளுக்கமைய தரவுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘டித்வா’ புயலின் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் 1,200க்கும் அதிகமான பெரிய அளவிலான நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதில் கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

  • கண்டி மாவட்டத்தில் 363

  • மாத்தளை மாவட்டத்தில் 162

  • நுவரெலியா மாவட்டத்தில் 219

  • பதுளை மாவட்டத்தில் 312

  • குருநாகல் மாவட்டத்தில் 89

  • கேகாலை மாவட்டத்தில் 79

பெரிய அளவிலான நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

இந்த பகுதிகளில் வசித்த மக்கள் தற்போது வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 50 ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்திற்கு 15 குழுக்கள், கேகாலை மாவட்டத்திற்கு 10 குழுக்கள், பதுளை மாவட்டத்திற்கு 5 குழுக்கள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.

நிலச்சரிவு அபாயத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள், அதிக அபாயம், நடுத்தர அபாயம் மற்றும் குறைந்த அபாயம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் அதிக அபாய வலயம் மீண்டும் மூன்று துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

அதிக அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள், வீடுகள் இருந்தும் வசிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், மற்றும் எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் அதிக அபாய வலயத்தில் அடங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டும் என NBRO பரிந்துரை செய்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பாதுகாப்பான நிலப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 20 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோரிக்கைகளும் கவனமாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் ஆசிறி கருணாவர்த்தன குறிப்பிட்டார்.

புதியது பழையவை