வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம்

 


சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) பணிகள் நிறைவடைந்த பின்னர், வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கக் கோரி 1 லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டன. அதன் முதல் கட்டமாக, வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டு வாக்காளர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 97.38 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பெயர் நீக்கத்திற்கான எதிர்ப்புகளுக்கு படிவம் 7, முகவரி மாற்றத்திற்காக படிவம் 8 ஆகியவற்றை ஜனவரி 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நோக்கில் இதுவரை படிவம் 6 மற்றும் 6A ஆகியவற்றை பூர்த்தி செய்து 1,83,111 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், பெயர் நீக்கக் கோரி 1,708 பேர் மனு அளித்துள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை