தொடரும் ஜெய்ஸ்வால் வேதனை – மீண்டும் கிடைக்குமா வாய்ப்பு?

 


விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்குப் பின்னர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் திறன் கொண்ட வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் கருதப்பட்டாலும், ஒருநாள் மற்றும் ‘டி-20’ அணிகளில் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமான ஜெய்ஸ்வால் (வயது 23), 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ‘டி-20’ போட்டிகளில் அறிமுகமானார். ‘டி-20’ போட்டிகளில் 23 ஆட்டங்களில் 723 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 164.31) குவித்திருந்தாலும், ஒருநாள் போட்டியில் அவருக்கான முதல் வாய்ப்பு 2025 பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் தான் கிடைத்தது.

ஐ.பி.எல். போட்டிகளில் 67 ஆட்டங்களில் விளையாடி 2 சதங்கள், 15 அரைசதங்களுடன் மொத்தமாக 2166 ரன்களை (ஸ்ட்ரைக் ரேட் 152.85) சேர்த்துள்ளார். இருப்பினும், “டெஸ்ட் வீரர்” என்ற முத்திரை அவருக்கு ஒட்டப்பட்டதால், குறைந்த ஓவர் அணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

களமிறங்க முடியாத துயரம்

2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ‘டி-20’ உலகக் கோப்பை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்களே தேவை என்ற காரணத்தால், ஜெய்ஸ்வால் இறுதி 11 பேர் அணியில் இடம்பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து 7 மாதங்களில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டாலும், நான்காவது ஸ்பின்னர் அவசியம் என பயிற்சியாளர் கௌதம் காம்பீர் உறுதியாக நின்றதால், மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

மீண்டும் ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் தனது கடைசி ஐந்து ‘டி-20’ போட்டிகளில் 93, 12, 40, 30, 10 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200க்கு நெருக்கமாக இருந்த போதும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘டி-20’ உலகக் கோப்பை அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

சுப்மன் கில் இல்லாத சூழலில், அணியின் இரண்டாவது துவக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக ஒருவர் தேவை என்பதனால், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மீண்டும் தொடருமா புறக்கணிப்பு?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் 116 ரன்கள் விளாசினார். மேலும், ஹரியானாவுக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 50 பந்துகளில் 101 ரன்கள் (50 ஓவர் வடிவம்) எடுத்தும் தனது திறனை நிரூபித்தார்.

இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பெறாமல் போகக்கூடும். காரணம், கேப்டன் சுப்மன் கில் மீண்டும் அணியில் சேரவுள்ளதாகும்.

ஜெய்ஸ்வால் இளம் வயதுடையவர்; அவருக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய இருக்கலாம். ஆனால், அவர் எங்கு குறை செய்கிறார், ஏன் தொடர்ந்து அணிகளில் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக அவரிடம் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், அவரது தன்னம்பிக்கையே பாதிக்கப்படக்கூடும்.

மேட்ச் வின்னர்

2008ஆம் ஆண்டு 19 வயது கோலியை மீண்டும் இந்திய அணியில் இணைத்த முன்னாள் தேர்வாளர் வெங்சர்க்கார் கூறியதாவது:

நான் தேர்வு செய்திருந்தால், சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலையே எடுத்திருப்பேன். அவர் பல முறை தனது திறனை நிரூபித்த ‘மேட்ச் வின்னர்’.”

டி-20’ அணியில் வீரர்கள் ‘பார்ம்’ மற்றும் ‘பிட்னஸ்’ அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட வேண்டும். ஒருவரின் இடம் காலியானதால் மட்டும் மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது.”

டி-20’ கிரிக்கெட் முழுவதும் தன்னம்பிக்கையை சார்ந்தது. ஒரு வீரரின் செயல்பாட்டை தொடர்ந்து புறக்கணித்தால், அது அவரது மனநிலையை பாதிக்கும்.

காத்திருப்பதே வழி

முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டபிள்யு.வி. ராமன் கூறுகையில்,

அனைத்து பேச்சுவார்த்தை விவரங்களையும் வெளியில் சொல்ல முடியாது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர், ஜெய்ஸ்வாலுடன் பேசிக் கொண்டிருப்பார். உலகக் கோப்பை அணித் தேர்வு முடிந்துவிட்டது. தற்போது செய்ய ஒன்றுமில்லை. ஜெய்ஸ்வால் பொறுமையாக காத்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர் பல உலகத் தொடர்களில் விளையாடுவார் என்பது உறுதி.

புதியது பழையவை