பிரித்தானியாவில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 300க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக, அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், சராசரியாக நாளொன்றுக்கு ஒரு நிலநடுக்கம் என்ற விகிதத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி, ஸ்காட்லாந்தின் லோச் லியோன் (Loch Lyon) பகுதியில் சில மணிநேர இடைவெளியில் 3.7 மற்றும் 3.6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. இவை 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களாகும்.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாத தொடக்கத்தில் லங்காஷயர் பகுதியில் 3.3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சில்வர்டேல் (Silverdale) பகுதியில் 2.5 மெக்னிடியூட் அளவிலான பின் அதிர்வுகளும் உணரப்பட்டன.
ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸ், தெற்கு வேல்ஸ், யோர்க்ஷயர் மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகள் அதிக நில அதிர்வு செயல்பாடுகள் பதிவாகும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நில அதிர்வு நிபுணர் பிரையன் பாப்டி, “பிரித்தானியாவில் பொதுவாக ஆண்டுக்கு 200 முதல் 300 வரை நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 309 ஐ தாண்டியுள்ளது. இவற்றில் 20 முதல் 30 நிலநடுக்கங்களை மட்டுமே பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்” என தெரிவித்தார்.
புவித் தகடுகளின் நகர்வு மற்றும் கிரேட் க்ளென் (Great Glen) போன்ற பழமையான புவியியல் பிளவுகளில் உருவாகும் அழுத்தங்கள் காரணமாக இத்தகைய நில அதிர்வுகள் ஏற்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.
பிரித்தானியா ஒரு கண்டத்தட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நாடாக இருப்பதால், பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்றுப் பின்னணி:
பிரித்தானிய வரலாற்றில், 1931 ஆம் ஆண்டு நோர்த் சீ (North Sea) பகுதியில் பதிவான 6.1 மெக்னிடியூட் நிலநடுக்கமே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இதற்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு லிங்கன்ஷயரில் 5.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இந்த ஆண்டில் மட்டும் நில அதிர்வுகளை உணர்ந்ததாக சுமார் 1,320 புகார்களை பொதுமக்கள் புவியியல் ஆய்வு மையத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்க நிலைமைகளை கண்காணிக்கும் நோக்கில், பிரித்தானியா முழுவதும் 80 கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருவதாக காவல்துறை மற்றும் அவசரகால சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
