யட்டியந்தோட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள் புதைந்துவிட்டார்.
பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும், நேதுகி சஹான்யாவின் உடல் நேற்று (14) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்கப்பட்டதாக யட்டியந்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை:
தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, அருகில் ஒரு நாய் மண்ணை தோண்டுவதை அவதானித்த குழுவினர், சோதனை செய்த போது, கித்துள் மரத்தின் கிளைகளுக்கு அடியில் உயிரிழந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்த நிலச்சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுமியின் தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
