யாழ்ப்பாணம், வேலணை அராலிச் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (31) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மீன் கொண்டு செல்லும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 35 கிலோ மாட்டு இறைச்சி மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மீன் வியாபாரி என்ற போர்வையில் பயணித்தபோது சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் தலா ஒரு கிலோ எடையுடைய 35 மாட்டு இறைச்சிப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் அவருடைய மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
