ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடைபெறுகிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 244 இந்திய வீரர்களும் 115 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
அணிகளின் நிலவரப்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 13 காலியிடங்கள் உள்ளன. அதேபோல, அந்த அணிதான் அதிகபட்ச தொகையான ரூ. 64.3 கோடியுடன் ஏலத்துக்குள் நுழைய உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 9 இடங்கள் மீதமிருக்கின்றன. அவர்களுக்கு ரூ. 43.4 கோடி கையிருப்பில் உள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு ரூ. 2.75 கோடி மட்டுமே எஞ்சியிருக்கிறது.
இந்தச் சூழலில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்?
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் ஆகிய மூவரும் பிபிசி தமிழுக்கு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். அவர்களின் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் அளித்த காரணங்கள் என்ன?
1. கேமரூன் கிரீன்
இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும்.
தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத்.
இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம். ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார்.
ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர்.
2. லியாம் லிவிங்ஸ்டன்
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள்.
"ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத்.
சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம்.
ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி.
3. வெங்கடேஷ் ஐயர்
