பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை அமர்வு, தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், இன்று காலை 9:30 மணியளவில் நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 8 வாக்குகள் ஆதரவாகவும் 7 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. மேலதிகமாக ஒரு வாக்கினால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:
தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்கள்.
ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி 2 உறுப்பினர்கள்.
சுயேட்சை (ஊசி) உறுப்பினர் 1 நபர்.
தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கால் பாதீடு நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, மூன்று குடும்பங்களுக்கு ரூபா 200,000 மதிப்புள்ள உதவிகளும் நகரசபையால் வழங்கப்பட்டன.
மேலும், மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடுவது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்டபோது, தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
