இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

 


இலங்கையில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார். "அவர்களை நாம் மீண்டும் உயர்த்தி கொண்டுவர வேண்டும். தொடர்ந்து ஏழ்மையான மக்களைக் கொண்ட தேசமாக இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல இயலாது," என்றும் அவர் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற 'பிரஜா சக்தி' தலைவர்களுக்கு நியமனம் வழங்கும் விழாவுக்கு அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் எடுத்துரைக்கையில்: கடந்த காலங்களில் 'வறுமை ஒழிப்பு' என்ற பெயரில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. எனினும், அவை அனைத்தும் வெற்றி பெறாத திட்டங்களாகவே அமைந்தன. இதற்கு முக்கிய காரணம், அந்தத் திட்டங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதுதான்."

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வளர்த்து, கிராம மட்ட முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்குடன் 'பிரஜா சக்தி' செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராம மட்டத்தில் வறுமையை நீக்கி, ஒரு வளம் மிக்க தேசத்தை உருவாக்கும் இலக்கிலேயே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது," என்று அவர் விளக்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 'பிரஜா சக்தி' குழுக்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் பகுதியாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான 'பிரஜா சக்தி' தலைமைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைவர்களிடம் நியமனக் கடிதங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர், "கிராமப்புற மக்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைச் சுயமாக அடைய முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கொள்கைக்கு ஏற்பவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமும் அடிப்படை முன்னேற்றத்தைக் காணும். தலைவர்களாக நியமனம் பெற்றவர்கள், ஜனாதிபதியின் கருத்துருவுக்கு ஏற்ப மிகுந்த பொறுப்புணர்வுடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்," எனவும் கேட்டுக்கொண்டார்.

புதியது பழையவை