புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கட்டுப்பாட்டில் உள்ள புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்தில், மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்த மூவருக்கு மொத்தமாக 7,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்ததாக, மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரும், பொதுமக்களான இருவரும் சேர்த்து மூன்று பேருக்கு எதிராக, புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகரால் நேற்று (19.12.2025 – வெள்ளிக்கிழமை) மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறித்த வழக்குகள் அதே தினத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வழக்கு விசாரணை முடிவில், குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவரையும் குற்றவாளிகளாக அறிவித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், மீன் வியாபாரம் செய்த நபருக்கு ரூ.5,000 அபராதமும், மற்ற இருவருக்கு தலா ரூ.1,000 வீதமும் விதித்தது. இதனால் மொத்த அபராதத் தொகை ரூ.7,000 ஆகும்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு சமூக சேவை செய்ய உத்தரவிடப்படும் என நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் தீர்ப்பளித்துள்ளது.