2027ஆம் ஆண்டுக்குள், அதிக அபாயம் நிறைந்த பகுதிகளில் எந்தவொரு குடும்பமும் வசிக்க முடியாத வகையில் தேவையான சட்டங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீள உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, 2027ஆம் ஆண்டிற்கு முன்னர் அபாய வலயங்களில் வசிக்கும் அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிட்வா புயலால் வீடுகளை இழந்ததும், மீண்டும் தங்களது வீடுகளில் குடியேற இயலாத நிலையிலும் உள்ள 17,648 குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் 6,228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 4,543 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகளில் வசிப்பது பாதுகாப்பற்றது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
