தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம், ஆளுநர் ரவி கவலைக்கிடமான தகவல்

 


தமிழகத்தில் தினமும் சுமார் 65 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இது பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாக உள்ளதாகவும், நாட்டிலேயே தற்கொலை அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் காணப்படுவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகிலுள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “சிந்து சரஸ்வதி நாகரிகம் – சிந்து நதி முதல் தாமிரபரணி வரை நாகரிகத்தின் பார்வையும் பயணமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இந்திய நாகரிகம் உலகிலேயே மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் எனவும், இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட துறைகளில் உள்ள இந்தியாவின் தொன்மையான அறிவுச் செல்வங்களை ஆய்வு செய்து, மொழிபெயர்த்து ஆவணப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.

மொழி, மண்டலம் போன்றவற்றில் வேறுபாடு இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டார். சரஸ்வதி நதி குறித்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது வெறும் புராணக் கதை அல்ல; அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நதி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மகாபாரதத்திலும் சரஸ்வதி நதி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

உலகிலுள்ள அனைத்து படைப்புகளும் ஒன்றே என்ற தத்துவமே வேதங்களின் மையமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய மனிதர்கள் மன அழுத்தம் மற்றும் பல்வேறு முரண்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். தேசிய குற்ற ஆவணத் துறையின் தரவுகளின்படி, தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், நாளுக்கு சராசரியாக 65 பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல், இழந்த கலாசார மதிப்புகளையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆரியம் – திராவிடம் என்ற பிரிவை பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்க முயற்சிப்பவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

புதியது பழையவை