முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர், திட்டமிட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டு கம்பஹா – வெலிவேரிய பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
அந்த துப்பாக்கி, இலங்கை இராணுவத்தினால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்படி வழங்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தாவை நேற்று முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது.
இதன் போது, குறித்த துப்பாக்கி சட்டரீதியாக அவருக்கு வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
