ரூ. 8.6 மில்லியன் பெறுமதியான பொருட்களுடன் மூன்று வர்த்தகர்கள் விமான நிலையத்தில் கைது

 


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சுமார் 8.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூன்று வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) அதிகாலை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விமான நிலைய வருகை முனையத்தின் “கிரீன் சேனல்” பகுதியில் இவர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண் வர்த்தகர் ஒருவரும், பண்டாரவளையைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பெண் வர்த்தகர்களும் உள்ளடங்குகின்றனர்.

கிரீன் சேனல் வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் நகர்ந்த இரண்டு பெண்களை சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அவர்களில் ஒருவரை உடல்நலக் குறைவு உள்ளவராக காட்டுவதற்காக சக்கர நாற்காலியில் அமர்த்தி, மற்ற பெண் அவரை தள்ளிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் துபாயிலிருந்து 8D-822 என்ற விமான சேவையின் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கும், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து FD-140 என்ற விமான சேவையின் மூலம் அதிகாலை 1.00 மணியளவிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பயணப் பைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் 220 கார்டன்கள் (44,000 ஸ்டிக்குகள்), 19 போத்தல்கள் வெளிநாட்டு மதுபானம், சுகாதார அமைச்சகம் அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் அனுமதி பெறாத அழகுசாதனப் பயன்பாட்டிற்கான “கொலாஜன்” 430 பொதிகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு வணிகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தேகநபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதியது பழையவை