கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த நிலையில், ஆழிப்பேரலை பேரழிவால் உயிரிழந்த 68 மாணவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு இன்று (26) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு, கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மு. சுரேஸ்தரன் தலைமையில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொதுச்சுடரை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த மாணவர்களின் நினைவாக பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் தூவி, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.