நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்

 


சுனாமி ஆழிப்பேரலை பேரழிவின் 21-ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சுனாமி உள்ளிட்ட பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலி நகரில் அமைந்துள்ள பேரலிய சுனாமி நினைவிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை விசேட நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதன் காரணமாக பல பில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துகள் முற்றாக சேதமடைந்தன.

2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினம்” என அறிவிக்கப்பட்டு, சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினமாக பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, டித்வா சூறாவளியால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் மாவட்ட மட்டங்களில் அனைத்து மத வழிபாடுகளுடனும் நடத்த திட்டமிடப்பட்டன.

இன்றைய தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு காலியில் உள்ள பேரலிய சுனாமி நினைவிடத்தில் இடம்பெற்றதுடன், நாட்டின் பல பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன

திருகோணமலை – மூதூர்

சுனாமி தாக்கத்தால் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மூதூரில் மட்டும் 286 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து நீண்டகால துயரங்களை அனுபவித்தனர்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, மூதூர் தக்வா நகர் ஏ.சி. பள்ளிவாசலில் காலை 8.30 மணியளவில் துஆ பிரார்த்தனை நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வு ஈராக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

யாழ் – உடுத்துறை

21-ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல், உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது நினைவுத் தூபிக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலைமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். பின்னர் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தேசிய கொடி மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரியால் ஏற்றப்பட்டதுடன், பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வவுனியா

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதுடன், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களும் நினைவுகூரப்பட்டனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க சுனாமி உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை

சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு 

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு,  கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர்.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள், கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவஅமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராமமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை