இளைஞர்களிடையே நிகழும் திடீர் மரணங்களுக்கும், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் இடையில் எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு, கொவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் மிக்கவை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (Indian Journal of Medical Research) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின் விவரங்கள்
ஆய்வாளர்கள், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் திடீர் மரணங்கள் குறித்து, வாய்வழி உடற்கூறு ஆய்வு (Verbal Autopsy), பிரேதப் பரிசோதனைப் படமெடுத்தல் (Post-mortem imaging), வழக்கமான உடற்கூறு ஆய்வு (Conventional Autopsy) மற்றும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவுகளின்படி, தடுப்பூசி நிலைக்கும் (Vaccination Status) இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் இடையில் முக்கியமான தொடர்பு எதுவும் காணப்படவில்லை.
பெரும்பாலான மரணங்கள், இருதய நோய்கள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட மருத்துவ நிலைமைகளாலேயே நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.