சிவனொளிபாதமலையில் பொலித்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

 


சிவனொளிபாதமலை சுற்றாடல் அதிக உணர்திறன் கொண்ட வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும் நிலையில், அந்தக் காலப்பகுதியில் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் பிற நபர்களால் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் பெருமளவில் அப்பிரதேசத்தில் தேக்கமடைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சிவனொளிபாதமலை வனப்பிரதேசம் சுற்றாடல் அதிகூருணர்வு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவது அவசியமாகியுள்ளது.

இதன் அடிப்படையில், 2025ஆம் ஆண்டு முதல் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுற்றாடல் அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடைமுறைகளை சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கி, அதற்கான ஒப்புதலும் பெற்றுள்ளார்.

அமல்படுத்தப்படவுள்ள முக்கிய நடவடிக்கைகள்:

• ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் மூலப்பொருளில் தயாரிக்கப்படும் உணவுப் பொதிகள் (லஞ்ச் சீட் உள்ளிட்டவை), அதிக தடிப்புடைய பொலிஎத்திலீன் பைகள், சிறிய சாச்சே பக்கட்டுகள், விரிவாக்கப்பட்ட பொலிஸ்டைரினால் செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பொருட்கள், குடிநீர் குழாய்கள், கலக்கிகள், தட்டுகள், கரண்டி, முள்ளுக்கரண்டி மற்றும் கத்திகள் ஆகியவற்றை விற்பனை செய்வதோ அல்லது யாத்திரிகர்கள் எடுத்துச் செல்வதோ முழுமையாகத் தடை செய்யப்படும்.

• ஒரு லீற்றருக்கு குறைவான ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பானங்களை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்படும்.

• பொலித்தீன் பொதி அல்லது பொதியிடப்பட்ட உணவு, பானம், மருந்து மற்றும் ஏனைய பொருட்களை சுற்றாடல் அதிகூருணர்வு வலயத்தில் கைவிடுவதற்கு அனுமதி வழங்கப்படாது.

• அந்த வலயத்தில் உள்ள வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொதியிலான பொருட்களால் உருவாகும் கழிவுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

• நீரூற்றுகள் மற்றும் நீரோட்டங்களை மாசுபடுத்துவதும், அங்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதும் கடுமையாகத் தடை செய்யப்படும்.

• வியாபார நிலையங்களை அமைக்கும் போதும், செயல்படுத்தும் போதும் உருவாகும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, சிவனொளிபாதமலை சுற்றாடல் அதிகூருணர்வு வலயத்திற்கு வெளியே கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் இறுதி கழிவகற்றல் செய்ய வேண்டிய பொறுப்பு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கே ஒப்படைக்கப்படும்.


புதியது பழையவை