வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் நடைபெறும் அனைத்து வகையான மத அடிப்படையிலான வன்முறைகளையும் அமெரிக்கா தெளிவாகக் கண்டிக்கிறது. அந்நாட்டில் வாழும் அனைத்து மத சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச இடைக்கால அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். மத சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கண்ணா, வெறுப்பு மற்றும் மதவெறி அடிப்படையிலான இவ்வாறான கொடூரச் செயல்களுக்கு எதிராக உலகளவில் குரல்கள் எழுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மண்டல் (29) என்ற மற்றொரு ஹிந்து இளைஞரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்களுக்கு வங்கதேச இடைக்கால அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இவ்வாறான சம்பவங்களை தடுக்க சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன்பு வங்காள ஹிந்து ஆதர்ஷ சங்கம் போராட்டம் நடத்தியது. நேபாளத்திலும் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அதேபோல், டெல்லி, கோல்கத்தா உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மத்திய அரசு, ஹிந்துக்கள் கொல்லப்படுவதை கடுமையாக கண்டித்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
