புயல் சீற்றத்தில் சிதறிய வாழ்வு: வீடு இழந்த குடும்பத்தின் கண்ணீர்க் கதை

 

image credit BBC 

வீட்டை இழந்து தவிப்பவரான கோகிலவதனி, கண்ணீருடன் தனது நிலையைத் தெரிவிக்கிறார்: "என் கணவர் கொழும்பில் மிகுந்த சிரமப்பட்டு வேலை செய்தார். சரியாக சாப்பிடாமலும், அதிகாலை 3 மணிக்கே எழுந்து சென்றும், அவர் பாடுபட்டு உழைத்துத்தான் இந்தக் குடிசையை ஒரு பெரிய வீடாக மாற்றினார். எங்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டார். ஆனால், இப்போது வீடு வாசல் இல்லாமல் நாங்கள் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்."

மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த கல்மடுவப் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலவதனி. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவரின் கணவர் தயாளன், கொழும்பில் கூலி வேலை செய்து வருகின்றார்.

'திட்வா' புயலின் கடுமையான தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களில் கோகிலவதனியின் குடும்பமும் ஒன்று.

தமது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தங்க நகைகளை வங்கியில் வைத்து, கடன் பெற்றுக் கட்டிய வீடு, புயலின் சீற்றத்தால் இன்று முற்றிலும் அழிந்து விட்டதாக அவர் கூறுகிறார்.


உறவினர் வீட்டில் குழந்தைகள்

கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது.

மண்மேடு ஒரு புறத்தை சேதப்படுத்தியுள்ளதுடன், மறுபுறத்தில் வீடு தாழிறங்கியுள்ளது. வீடு கட்டியுள்ள நிலம் தாழிறங்கதாலும், வீடு முழுவதும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் ஊற்று நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிந்ததுடன், அதனால் வீடு படிப்படியாக தாழிறங்கி வருகின்றது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வீட்டை இழந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த கோகிலவதனியின் குழந்தைகள், தற்போது பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடைந்த வீடு, மின்சாரம் இல்லாத நிலைமை, குடிநீர் என அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள தாம் எவ்வாறு பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்திருப்பது என்கிறார் கோகிலவதனி.

சமைத்து சாப்பிட கூட இயலாத நிலை

''பிள்ளைகளையும் அங்க விட்டு விட்டோம். போன் பண்ணி எப்போ வாரீங்க. எப்போ வாரீங்க, எப்போ கூட்டிட்டு போறீங்கனு கேட்குறாங்க. அவர்களை கூட்டிட்டு வந்து எங்க வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவங்களும் பாவம். நாங்களும் என்ன செய்வது? இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க இயலாத நிலைமை. நாங்களே இன்னுமொரு இடத்தில தான் தங்கியிருக்கின்றோம். அடுத்த நாள் காலையில வீடு இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் வருகின்றோம் நாங்கள். சமைத்து சாப்பிட கூட இயலாத நிலைதான் இருக்கு.'' என கோகிலவதனி குறிப்பிடுகின்றார்.

கடுமையான கஷ்டத்திற்கு மத்தியில் கட்டிய வீட்டில் தான் வாழ்ந்தது சிறிது காலமே என கோகிலவதனி கண்ணீர் மல்க கூறுகின்றார்.

''இந்த வீட்டில் வந்து நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். வீடு கட்டி ஐந்து ஆறு வருஷமாகுது. நாங்கள் பிள்ளைகளோட சந்தோஷமாக இருந்தோம் . இப்போது எப்படி திரும்ப வந்து இந்த வீட்டில இருப்பது என்று கவலையாக இருக்குது. நகை எல்லாம் வச்சு தான் இந்த வீட்டை கட்டி எடுத்தோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடுப்பு கூட இல்லை. இன்னொருத்தர் கிட்ட வாங்கி தான் நாங்க உடுப்பை உடுத்துறோம்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

image credit BBC 


''இனி இந்த வீட்டில் வாழ கஷ்டம். சின்ன மழை வந்தாலும் இந்த இடத்தில் இப்போது இருக்க முடியாது."

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த வீட்டை கட்டினோம். அதுவும் இல்லாமல் போயிட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்கிறார் தயாளன்.

தயாளன், கோகிலவதனி தம்பதிக்கு மாத்திரம் அல்ல. லட்சக்கணக்கானோர் இப்படியான பல பிரச்னைகளை திட்வா புயலினால் எதிர்கொண்டுள்ளனர்.

வீடுகளை சுத்திகரிக்கவும், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், வீடுகளை புனரமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதை எண்ணி தயாளனும் கோகிலவதனியும் இந்த நாட்களை கடத்தி வருகின்றனர்.

புதியது பழையவை