இவ்வருடம் நடைபெறும் “தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை, காலி மாவட்டத்தில் அமைந்துள்ள “பெராலிய சுனாமி நினைவுத் தூபி” அருகே நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகளால் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில், நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட உள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் காரணமாக, இலங்கையில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 க்கும் மேற்பட்டோர் காணாமற்போயிருந்தனர்.
மேலும், பில்லியன் கணக்கான ரூபா பெறுமதியுள்ள சொத்துகள் அந்த அனர்த்தத்தில் முற்றாக சேதமடைந்தன.
அதனடிப்படையில், 2005 ஆம் ஆண்டின் 15/1975/715/001-1 இலக்க அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” அறிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சுனாமி உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களால் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் நோக்கில், 2005 முதல் 2014 வரை அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன், பொதுமக்களின் ஒத்துழைப்போடு தேசிய பாதுகாப்பு தின நினைவுகூரல் நிகழ்வுகள் தேசிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.