டிட்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர், தற்போது சீரான வானிலை நிலவுவதால் சுற்றுலாப் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
முன்னதாக, சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான கன மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் நுவரெலியாவில் சுற்றுலா பயணிகள் வருகையில் கணிசமான குறைவைக் ஏற்படுத்தியிருந்தது.
வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர், நுவரெலியாவின் முக்கிய சுற்றுலா இடங்களை மையமாகக் கொண்டு பல மறுசீரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் போது, நுவரெலியா – பதுளை பிரதான வீதிக்கு அருகிலுள்ள கிரகறி வாவியில், நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக படகு சவாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து பெய்த கன மழையால் படகுகள் சேதமடைந்த நிலையில், அவை அனைத்தும் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டதால், படகு சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும், தற்போது வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, சேதமடைந்த படகுகள் சீரமைக்கப்பட்டு, சுமார் 20 நாட்களுக்குப் பிறகு படகு சவாரி சேவைகள் மெதுவாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைந்ததை காண முடிகிறது.
சில இடங்களில் வானிலை காரணமான சிறிய போக்குவரத்து இடையூறுகள் காணப்பட்டாலும், நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நுவரெலியாவில் நிலவி வரும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது.
ஒரே நாளில் வெயில், சாரல் மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற வானிலை மாற்றங்கள் காணப்படுவதால், இந்த தனித்துவமான காலநிலை அனுபவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


