ரசிகர்களை ஏமாற்றிய மெஸ்ஸி.! மைதானத்தில் மோதல்

 


அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி மிகச் சில நிமிடங்களே களத்தில் காணப்பட்டார்.

அப்போதும் அவரைச் சரிவரப் பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுமையாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து விரும்பிகள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து சால்ட் லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு இரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

டிக்கெட் விலை

மெஸ்ஸியைக் காண ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை சீட்டு எடுத்து இரசிகர்கள் வந்துள்ளனர். ஆனால் உடனே வெளியேறியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் போத்தல்களை வீசியும், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் இரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் இரசிகர்கள் மீது பொலிஸார் சற்று தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனையடுத்து இந்தச் சம்பவத்திற்காக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பத் தருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதியளித்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புதியது பழையவை