திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் இணைந்து சுகயீன விடுமுறையில் ஈடுபட்டதுடன், ஓர் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வெருகல் பிரதேச செயலகத்தின் முன்புறத்தில் இன்று (15) இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாகச் செயலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டதுடன், சேவைகளைப் பெறாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
மனு கையளிப்பு
வெள்ள அனர்த்தத்தின்போது மக்களுக்காகப் பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக, சிலரின் தனிப்பட்ட இலாபங்களுக்காக உண்மைத்தன்மையை ஆராயாமல் கடந்த சனிக்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் செயல்பாட்டைக் கண்டித்து, இந்தச் சுகயீன விடுமுறைப் போராட்டமும் அமைதிக் கவனயீர்ப்பும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின்போது வெருகல் பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தரிடம் ஒரு மகஜரும் (மனு) கையளிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று (14) ஒரு நபர் ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
