காம்பிர் விவகாரத்திற்கு முடிவா? இந்திய அணிக்கு இரு பயிற்சியாளர் முறையை பரிசீலிக்கும் பி.சி.சி.ஐ.

 


மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிரின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி-20) இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக காம்பிர் பொறுப்பில் உள்ளார். அவரது பயிற்சியில் ‘ஒயிட் பால்’ போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி (ஒருநாள்) மற்றும் ஆசிய கோப்பை (டி-20) ஆகியவற்றை இந்தியா கைப்பற்றியது.

டெஸ்ட் போட்டிகளில் சரிவு

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு திருப்தியளிக்காததாக உள்ளது. காம்பிர் தலைமையில் விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் 10 தோல்விகள், 7 வெற்றிகள் மற்றும் 2 சமன்களை இந்திய அணி சந்தித்துள்ளது. வெற்றி சதவீதம் 36.84 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘சேனா’ நாடுகளுக்கு எதிராக 10 தோல்விகள் பதிவானது பி.சி.சி.ஐ.-க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட்களிலும் முழுமையான தோல்வி சந்திக்கப்பட்டது.

இதன் காரணமாக, டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து காம்பிரை நீக்க பி.சி.சி.ஐ. யோசித்ததாக கூறப்படுகிறது. 2025–27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் எஞ்சிய 9 போட்டிகளுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணை அணுகியபோதும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவித்ததால், அது காம்பிருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

டிரஸ்சிங் ரூமில் பதற்றம்

பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “காம்பிர் வந்த பின்னர் இந்திய அணியின் டிரஸ்சிங் ரூமில் குழப்பமான சூழல் நிலவுகிறது. அணியில் நிரந்தர இடம் இல்லை என்ற உணர்வு வீரர்களிடையே காணப்படுகிறது. டி-20 உலக கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்ட சம்பவம் இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

காம்பிரின் பயிற்சியாளர் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை செல்லுபடியாகும் நிலையில், பி.சி.சி.ஐ.-யில் அவருக்கு ஆதரவும் உள்ளது. 2026 டி-20 உலக கோப்பையில் இந்திய அணி பட்டத்தை தக்கவைத்தால் அல்லது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அவர் பயிற்சியாளராக தொடர வாய்ப்பு அதிகம். எனினும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அவர் தொடர்வாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

2026 டி-20 உலக கோப்பைக்கு பின்னர், இரு மாதங்கள் நீடிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால், ஒரே பயிற்சியாளரா அல்லது டெஸ்ட் மற்றும் ஒயிட் பால் போட்டிகளுக்கென தனித்தனி இரு பயிற்சியாளர்களா என்பதை தீர்மானிக்க பி.சி.சி.ஐ.-க்கு போதிய அவகாசம் உள்ளது. வரவிருக்கும் மூன்று மாதங்கள் காம்பிருக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதியது பழையவை