ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சரிசெய்து கொள்ள அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டாகும்போது நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படுவதைக் கைவிட்டு, அனுபவமுள்ள தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டமிடல் என்ன என்பது தொடர்பில் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
நிவாரணமாகக் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதைத் தவிர வேறு எதனையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.
அந்தப் பணமும் சரியானமுறையில் மக்களுக்குக் கிடைப்பதில்லை எனப் புகார் தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கும் பணத்தைப் மக்களுக்குப் பகிர்ந்தளித்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றே அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது.
நன்கொடைகள் குறித்த தெளிவின்மை
ஆனால், ஏற்பட்ட அனர்த்தத்தில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான பாதிப்பு தொடர்பில் இதுவரை மதிப்பிடப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நன்கொடைகளை வைத்துக்கொண்டு, பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றே அரசாங்கம் கற்பனை செய்து வருகிறது.
எமது நாடு சுனாமியால் பாதிக்கப்பட்டும், ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டும் பெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே தற்போது இயற்கை அனர்த்தத்துக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
புத்தாண்டில் பொருளாதார அச்சுறுத்தல்
அதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப திட்டமிட்டு நாங்கள் செயற்படாவிட்டால், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டாகும்போது டொலரின் பெறுமதி அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்குச் செல்லும் அபாயம் இருக்கிறது.
நாட்டை கட்டியெழுப்ப இந்தியாவிடம் இருந்து $4 பில்லியன் டொலர் கிடைக்கப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு கிடைத்தால், நாடு என்ற அடிப்படையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அந்தப் பணம் எமக்கு கடனாகக் கிடைக்கின்றதா அல்லது நன்கொடையாகக் கிடைக்கின்றதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அந்தப் பணம் எதற்காகச் செலவிடப்படப் போகிறது என்ற எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது.
அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் தேவை
கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களால் எமது நாடு பாதிக்கப்பட்டபோது, அதற்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்காக அப்போது இருந்த அரசாங்கங்கள் நிபுணர்கள் குழு அமைத்து நடவடிக்கை எடுத்திருந்தன.
அதனால் அரசாங்கம் இந்த குழுக்களில் இருந்த உறுப்பினர்களிடமாவது ஆலோசனைகளைக் கேட்கலாம்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் விக்ரமசிங்க இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்காக முழு நாட்டு மக்களையும் காப்புறுதி செய்திருந்தார். 2020க்குப் பின்னர் அந்தக் காப்புறுதித் திட்டம் இரத்து செய்யப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரையும் மீளக் கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முறையான திட்டமிடல் மூலமே நடவடிக்கை எடுத்தார்.
"அதனால் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படுவதை விட்டுவிட்டு, அனுபவமுள்ள தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறது," என்று ஹரின் பெர்ணான்டோ வலியுறுத்தினார்.