ஒரே வாரத்தில் பெரும் உயர்வு: ஈலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?

 


உலகின் பணக்காரர்களில் முதலிடத்தை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான ஈலோன் மஸ்க், மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

சமீப காலத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா 18,512,000 கோடி) எட்டியதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் 600 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் நபராக ஈலோன் மஸ்க் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலர்களையும் கடந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தைச் சுற்றிய வழக்கில் ஈலோன் மஸ்க்குக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அவரது மொத்த சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கை ரூபா 23,109,646 கோடி) உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுமார் 800 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர்களை எட்டியது.

தற்போது, ஒரே வாரத்திற்குள் அவரது சொத்து மதிப்பு 749 பில்லியன் டொலர்களாக உயர்ந்து, ஈலோன் மஸ்க் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

புதியது பழையவை