மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் மற்றும் வீதி உணவு விற்பனை நிலையங்கள் மீது, மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகப் பெறப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையின் கடும் நடவடிக்கை
மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பண்டிகைக் கால நடைபாதை வியாபார நிலையங்களில் இயங்கும் சிற்றுண்டி மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை இடங்களையும் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்துள்ளனர்.
சுகாதாரமற்ற உணவுகள் அழிப்பு
அதேவேளை, மன்னார் நகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி உணவுகளை தயாரித்ததும், அசுத்தமான சூழலில் சமையல் பகுதியை பராமரித்ததும், மேலும் சூடான உணவுகளை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் வாளிகளில் சேமித்து வைத்திருந்ததுமாக கண்டறியப்பட்ட உணவகம் ஒன்றுக்கு எதிராக சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனுடன், அந்த உணவுகள் பொதுப் பயன்பாட்டிற்கு பொருத்தமற்றவையாகக் கருதப்பட்டு அழிக்கப்பட்டன.